சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் வாழ்க்கையில் 100வது சதத்தை தனது சொந்த மண்ணில் எடுத்தால் அவருக்கு 100 தங்கக் காசுகளை பரிசாக வழங்கவிருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3வது இறுதி டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது.
"எம்.சி.ஏ. தலைவர் விலாஸ் ராவ் தேஷ்முக், டெண்டுல்கர் 100வது சதத்திற்கு 100 தங்கக்காசுகளை பரிசாக அறிவித்துள்ளார்." என்று இணைச் செயலர் நிதின் தால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈடன் கார்டனில் தன் 100வது சதத்தை சச்சின் எடுத்தால் 100 தங்கக்காசுகளை அளிப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் சச்சின் ஏமாற்றமளித்தார்.
தற்போது அதனைப் பின்பற்றி மும்பை கிரிக்கெட் சங்கமும் இதுபோன்று அறிவித்துள்ளது. ஆனால் தனது 100வது சதம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில்,
"என்னை பொறுத்த மட்டும் அது ஒரு எண் என்று தான் உணருகிறேன். அது பற்றி நான் சிந்திப்பது இல்லை.
நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை பற்றி தான் நினைக்கிறேன். எனது ஆட்டத்தை நான் அனுபவித்து விளையாடுகிறேன். நான் எனது 90-வது சதத்தை தொட்ட போது யாரும் எதுவும் சொல்லவில்லை. 99-வது சதத்தை அடித்த போது கூட யாரும் பேசவில்லை. ஏன் இப்போது இதனை பற்றி பேசுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
எனது 100-வது சதம் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அதற்காக அவசரம் காட்டாமல் எனது வழக்கமான ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவேன். சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளை கடந்தது மகிழ்ச்சியும், பெரிய திருப்தியையும் அளிக்கிறது' என்றார்.