ஜெய்ப்பூரில் நடைபெற்ற இரானி கோப்பைக்கான 5 நாள் கிரிக்கெட் போட்டியில் பார்த்தீவ் படேல் தலைமை ரெஸ்ட் ஆப் இந்தியா அணி ரஞ்சி சாம்பியன் ராஜஸ்தான் அணியை 404 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெஸ்ட் வீரர் பிராக்யன் ஓஜா இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 663 ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணியும் சளைக்காமல் 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முகுந்த், தவான் சதங்களுடன் 354/2 என்று டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து 618 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி சற்று முன் 5ஆம் நாளான இன்று தன் இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்குச் சுருண்டு படு தோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிராக்யன் ஓஜா இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டு அனில் கும்ளே பாணியில் வீசி வரும் உயரமான ராகுல் ஷர்மா என்ற லெக் ஸ்பின்னர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் சிறப்பாக வீசினர். இதில் உமேஷ் யாதவ் நல்ல வேகமும், எழுச்சியும் காட்டினார்.
அதே போல் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் தவான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பெருமை சேர்த்தார். இந்திய அணியின் புதிய 'சென்சேஷன்' ஆன அஜின்கியா ரஹானே முதல் இன்னிங்ஸில் அபார சதம் கண்டார்.
இங்கிலாந்துக்கு எதிராக தேர்வு செய்த இந்திய அணியின் இந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது இந்த இரானி டிராபி கிரிக்கெட்டின் சிறப்பம்சம் ஆகும்.