சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து 644 ரன் குவிப்பு: தோல்வியை நோக்கி ஆஸ்ட்ரேலியா
வியாழன், 6 ஜனவரி 2011 (13:15 IST)
சிட்னியில் நடந்து வரும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் குக், பெல், பிரையர் ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 644 ரன்கள் குவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்ட்ரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருக்கிறது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ட்ரேலியா அணி 280 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பந்து வீச்சாளர் ஜான்சன் 53 ரன் எடுத்தார். தொடக்க வீரர் வாட்சன் 45 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை.
இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 4 விக்கெட்டும், பெர்சனன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 644 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அந்த அணியில் குக் (189), பெல் (115), பிரையர் (118) ஆகியோர் சதம் அடித்தனர்.
ஆஸ்ட்ரேலியா தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டும், ஹில்பென்ஹவுஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 364 ரன்கள் பின் தங்கிய ஆஸ்ட்ரேலியா அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 46 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்ட்ரேலியா, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக கிளார்க் 41 ரன்கள் எடுத்தார். வாட்சன் (38), ஹியூஸ் (13), கவாஜா (21), ஹஸ்சி (12)ஹ ஹாடின் (30), ஜான்சன் (0) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன், ட்ரெம்லெட், பிரெஸ்னன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் 151 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்ட்ரேலியா அணிக்கு 3 விக்கெட் மட்டுமே உள்ளது. கிட்டதட்ட ஆஸ்ட்ரேலியா தோல்வியை நோக்கியே செல்கிறது என்பது நிச்சயம்.
2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து இதில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும்.