குக், பெல் சதம்; வலுவான நிலையில் இங்கிலாந்து

புதன், 5 ஜனவரி 2011 (13:28 IST)
சிட்னியில் நடைபெறும் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 5-வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று இங்கிலாந்து வீரர்கள் அலிஸ்டைர் குக், இயன் பெல் அபார சதம் எடுக்க அந்த அணி ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது.

இதன் மூலம் ஆஸ்ட்ரேலியாவைக் காட்டிலும் 208 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து. ஆட்ட முடிவில் மேட் பிரையர் 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

167 ரன்களுக்கு 3 விக்கெட் என்று துவங்கிய இங்க்கிலாந்து இரவுக்காவலன் ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 7 ரன்களில் இழந்தது. சிடில் பந்தில் இவர் பௌல்டு ஆனார். 181/4 என்ற நிலையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு சற்றே நம்பிக்கை இருந்தது.

ஆனால் நம்பிக்கையைச் சிதைத்தார் அலிஸ்டைர் குக், அவர் 202 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். காலிங்வுட் 13 ரன்களுக்கு சுழற்பந்து வீச்சாளர் பியரிடம் ஆட்டமிழந்தார். பெல் இருபது ரன் எடுக்க குக் 130 ரன்கள் எடுக்க உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 277/5 என்று இருந்தக்டு.

ஆனால் அதன் பிறகு குக், இயன் பெல் இணைந்து ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சை வறுக்கத் தொடங்கினர். குக் 189 ரன்களில் 16 பவுண்டரிகள் அடித்து வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியாவைக்காட்டிலும் 100 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

அதன் பிறகு இயன் பெல் அடிக்கத் தொடங்க மேட் பிரையரும் அதிரடியில் இறங்கினார் இருவரும் இணைந்து சுமார் 24 ஓவர்களில் 7-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைக் குவித்தனர்.

இயன் பெல் 115 ரன்கள் எடுத்து கடைசியாக ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்