கடந்த சில மாதங்களாக காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தற்போது அவர் முழங்கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வருகிறாராம். இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப 8 முதல் 9 வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரிலும் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள ஷமி, “ஏன் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புகிறீர்கள்? காயத்தில் இருந்து மீண்டுவர என்னால் முடிந்ததை எலலால் செய்கிறேன். பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட மாட்டேன் என நானோ அல்லது பிசிசிஐ தரப்போ அறிவிக்கவில்லை. ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.