ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேசம். சிட்டகாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் 43 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
வங்கதேசம் தரப்பில் தொடக்க வீரர் தமிம் இக்பால், ஜுனாயத் சித்திக் ஆகியோர் அரை சதமடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
அதிரடியாக விளையாடிய தமிம் இக்பால் 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 28.6-வது ஓவரில் ஜிம்பாப்வே வீரர் தபெங்வா வீசிய பந்தில் கிரெமரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் தமிம். 96 பந்துகளைச் சந்தித்த அவர் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்தார். ஜுனாயத் சித்திக் 56 ரன்கள் எடுத்தார். 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வங்கதேசம் வெற்றி பெற்றது.
முன்னதாக, ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 21 ரன்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இர்வின், விக்கெட் கீப்பர் தைபு ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இர்வின் 46 ரன்களும்; தைபு 64 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சிகும்புரா 23 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஆட்டத்தில் 95 ரன்கள் குவித்த வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். அந்த அணியின் அப்துர் ரசாக் தொடர்நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வங்கதேசம் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. 4-வது ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் வென்று 3-1 என தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்.