சச்சின் சாதனைகளை எந்த வீரரும் முறியடிக்க முடியாது: சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
ஞாயிறு, 12 டிசம்பர் 2010 (12:03 IST)
சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை இப்போதுள்ள எந்தவொரு கிரிக்கெட் வீரராலும் முறியடிக்க முடியாது என மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக டெல்லி வந்துள்ள ரிச்சர்ட்ஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதவாது:
சச்சின் ஒரு மிகச் சிறந்த வீரர். அவரின் சாதனைகளை நிச்சயம் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் நெருங்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதங்கள் என்ற மைல் கல்லையும் விரைவில் அவர் எட்டுவார்.
37 வயதாகும் சச்சின், கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரைப் பதித்து வருகிறார். அதற்கு அவரின் தனிமனிதப் பண்பும், ஒழுக்கமுமே காரணமாகும். இத்தனை ஆண்டு காலத்தில் காயம் உள்ளிட்ட காரணங்களால் சச்சின் அதிகம் பின்தங்கிவிடவில்லை. கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, நேர்மை, நம்பிக்கை ஆகியவையே சச்சினின் சாதனைகளுக்குக் காரணமாக இருக்க முடியும் என நம்புகிறேன்.
இப்போதுள்ள வீரர்களில் ஆஸ்திரேலியக் கேப்டன் ரிக்கி பாண்டிங், சச்சினின் சாதனைகளுக்கு அருகில் வேண்டுமானால் வரலாம், ஆனால் நிச்சயமாக முறியடிக்க முடியாது.
உலகின் மிகச் சிறந்த அதிரடி வீரர் சேவாக்தான். எந்தவொரு வேகப் பந்துவீச்சுக்கும் நான் பயந்தது கிடையாது. அதேபோன்ற துணிச்சலை சேவாக்கிடம் பார்க்கிறேன். அவர் விளையாடும் விதம் அலாதியானது. பேட்டிங்கில் தனக்கென ஒரு தனித்துவத்தை அவர் கொண்டுள்ளார். தன்னிடத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அந்த குணமே அவரின் வெற்றிக்குக் காரணம்.
உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.