இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மீது ஷேன் வார்ன் காட்டம்
செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (17:26 IST)
வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் தன்னை விலக்கிக் கொண்டது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மரியாதை தருவதாகாது என்று ஆஸ்ட்ரேலிய முன்னாள் சுழற்பந்து மேதை ஷேன் வார்ன் சாடியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெறும் இங்கிலாந்து-வங்கதேச தொடருக்கு ஸ்ட்ராஸ் தன்னை விலக்கிக்கொள்ள, அலிஸ்டைர் குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ட்ராசிற்கு ஓய்வு தேவை என்று இங்கிலாந்து வாரியம் கூற முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் ஸ்ட்ராசின் இந்த முடிவை கண்டித்து வருகின்றனர்.
அதில் தற்போது ஷேன்வார்னும் கலந்து கொண்டு சாடியுள்ளார்:
"ஸ்ட்ராஸிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று நான் கேள்விப்பட்டவுடன் எனக்கு இது ஒன்றும் சரியானதாகத் தோன்றவில்லை. நான் கேப்டனாக இருக்கும்போது என்னுடைய வீரர்களிடமிருந்து நான் சிறந்ததை எதிர்பார்ப்பேன், அதாவது தட்டிக் கொடுத்தாலும், சாடினாலும் நான் என் வீரர்களுடன் இருக்கவே விரும்புவேன்.
இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் வங்கதேசத் தொடரிலிருந்து விலகியதையடுத்து, நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், என்னால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓவ்வொரு முறையும் நாட்டை பிரதிநிதித்துவம் செய்வது என்பது சிறப்பு வாய்ந்தது. கேப்டனுக்கு எப்படி ஓய்வு அளிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை." என்று கூறிய வார்ன், குக்கை கேப்டனாக நியமித்ததையும் கடுமையாக சாடினார்.
"அவர் அணியில் தன்னுடைய இடத்திற்காகப் போராடியவர், திடீரென அவர் ஒரு சதம் எடுக்கிறார். உடனே அவர் கேப்டன்! மைக்கேல் கார்பெர்ரி (இங்கிலாந்தின் புதிய துவக்க வீரர்) 3 சதங்களை அடித்து, குக் 2 ரன்கள்தான் எடுக்கிறார் என்றால் உடனே உங்கள் கேப்டனை அணியிலிருந்து நீக்கி விடுவீர்களா?
வங்கதேச அணியை இங்கிலாந்து சுலபமாக எடைபோடாமல் இருந்தால் சரி. அவர்கள் கொஞ்சம் பலமான அணிதான், வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியை வென்றால் உடனே ஸ்ட்ராஸ் இரண்டாவது டெஸ்டிற்கு தலைமையேற்க வந்து விடுவாரா? இது ஒரு புதிய போக்கின் ஆரம்பமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்காத போக்கு என்றே நான் கருதுகிறேன்."