ஹர்பஜன் அபாரம்; இந்தியா வெற்றி

சனி, 21 மார்ச் 2009 (11:00 IST)
ஹேமில்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூஸீலாந்து தன் 2ஆவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு சுருண்டது. ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற தேவையான 39 ரன்களை இந்தியா 5.2 ஓவர்களில் எடுத்து 33 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியை நியூஸீலாந்து மண்ணில் வென்றது. ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர்.

இன்று காலை 75/3 என்று துவங்கிய நியூஸீலாந்து அணி 110 ரன்களை எட்டியபோது ராஸ் டெய்லர் 4 ரன்கள் எடுத்து முனாஃப் படேல் பந்தில் சேவாகிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜெஸ்ஸி ரைடர் களமிறங்கி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஃப்ளின் மறு முனையில் அபாரமாக விளையாடி தன் அரைசதத்தை எடுக்க உணவு இடைவேளையின் போது நியூஸீலாந்து 146/5 என்று இருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு முதலில் ஜேம்ஸ் பிரான்க்ளின் 14 ரன்கள் எடுத்து ஹர்பஜனிடம் வீழ்ந்தார். உடனேயே ஃபிளின் 6ல்7 ரன்கள் எடுத்த நிலையில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். 161/7 என்ற நிலையில் மெக்கல்லமும், வெட்டோரியும் இணைந்து 38 ரன்களை 8-வது விக்கெட்டுக்கு சேர்த்தனர்.

21 ரன்கள் எடுத்திருந்த வெட்டோரி அபாரமான ஹர்பஜன் பந்திற்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 199/8 என்ற நிலையில் இன்னிங்ஸ் தோல்விதான் என்று ஆன பிறகு மெக்கல்லமும், ஓ'[பிரையனும் இந்தியாவை வெறுப்பேற்றினர்.

இருவரும் இணைந்து 76 ரன்களை 9-வது விக்கெட்டுக்கு சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தனர். ஓபிரையன் 14 ரன்கள் எடுத்து ஹர்பஜனிடம் ஆட்டமிழந்தார்.

மெக்கல்லம் தன் அதிரடி ஆட்டத்திறனை பயன்படுத்தி 135 பந்துகளில் 84 ரன்களை 11 பவுண்டரிகளுடன் விளாசி யுவ்ராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். நியூஸீலாந்து முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஹர்பஜன் சிங் 28 ஓவர்கள் வீசி அதில் 2 மைடன்களுடன் 63 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹர்பஜன் சிங் அயல் நாட்டு மைதானங்களில் வீசிய மிகச் சிறந்த பந்து வீச்சு இத்வுஏ.

39 ரன்கள் வெற்றி இலக்குட களமிறங்கிய இந்தியா திராவிடுடன், கம்பீரை களமிறக்கியது. கம்பீர் 18 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களை விளாசினார். திராவிட் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது.

160 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்ட மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்