சிட்டகாங்கில் நடைபெறும் இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 208 ரன்களுக்குச் சுருண்டது. புதிர் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரண்டாம் நாளான நேற்று இலங்கை தன் முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தில்ஷானைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கபுகேதரா 96 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணியில் மோர்டசா 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹஸன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தன் முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம் தமீம் இக்பால், இமுருல் ஆகியோரை சொற்ப ரன்களில் இழந்தது. அதன் பிறகு சித்திக், ராகிபுல் ஹஸன், மெஹ்ராப், ஷாகிப் என்று அனைத்து முக்கிய வீரர்களும் பெர்னான்டோ, மென்டிஸ், முரளிதரன் ஆகியோரிடம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இடையே கேப்டன் அஷ்ரஃபுல் 45 ரன்கள் எடுத்து முரளியிடம் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம், எமானுவல் ஹக் ஆகியோர் ஆட்டமிழக்க வங்கதேசம் 145/9 என்று ஃபாலோ ஆன் ஆடும் நிலைமைக்கு வந்தது.
ஆனால் மஷ்ரஃபே மொர்டசா அபாரமான அதிரடி ஆட்டம் விளையாடி 89 பந்துகளில் 8 பவுண்டரிஅகள் 2 சிக்சர்களுடன் 63 ரன்களை விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை 208ரனகளுக்கு உயர்த்தினார்.
இதம் மூலம் இலங்கை அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றது. அஜந்தா மென்டிஸ் மீண்டும் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளையும், முரளிதரன் 3 விக்கெட்டுகளையும், வாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
3ஆம் நாளான இன்று சற்று முன் வரை இலங்கை அணி தன் 2-வது இன்னிங்சில் வர்ணபுரா (27), ஹெச். ஜெயவர்தனே (28) ஆகியோர் விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.