2-வது ஒரு நாள்: மேற்கிந்திய அணி அபார வெற்றி

சனி, 3 ஜனவரி 2009 (17:51 IST)
கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் நியூஸீலாந்து-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றி பெற்று 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது.

மழை காரணமாக தாமதமாக துவங்கிய ஆட்டத்தில் அணிக்கு 28 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் ஃபீல்ட் செய்ய தீர்மானித்தது.

நியூஸீலாந்து அணியில் துவக்க வீரர் ரைடர் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்களை விளாசி சுமாரான துவக்கத்தை கொடுத்தார். ஜேமி ஹவ் 27 ரன்களையும் ஜேகப் ஓரம் 25 ரன்களையும், ஜி.டி. எலியட் 30 ரன்களையும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 28 ஓவர்களில் நியூஸீலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது.

மேற்கிந்திய அணியில் எட்வர்ட்ஸ் சிக்கனமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெய்லர் 2 விக்கெட்டுகளையும், மில்லர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேற்கிந்திய அணி சாட்டர்கூன் விக்கெட்டை 14 ரன்களில் இழந்தாலும் கேப்டன் கெய்லின் அதிரடி 36 ரன்களால் நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் கெய்ல் ஆட்டமிழந்தவுடன் மார்ஷல், நேஷ், போலார்ட் ஆகியோர் விக்கெட்டுகளையும் சொற்ப ரன்களில் இழக்க மேற்கிந்திய அணி 22.3 ஓவர்களில் 110/5 என்று ஆனது.

33 பந்துகளில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் சர்வாணும், ராம்தின்னும் அதிரடி ஆட்டம் விளையாடி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் கடைசி பந்திற்கு முதல் பந்தில் வெற்றியை ஈட்டினர். சர்வாண் 67 ரன்களையும், ராம்தின் 28 ரன்களையும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. 27.5 ஓவர்களில் மேற்கிந்திய அணி 158/5 என்று வெற்றி வாகை சூடியது.

சர்வாண் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்