வாட்சன் விவகாரத்திற்காக வருத்தப்படப் போவதில்லை-கம்பீர்!

புதன், 12 நவம்பர் 2008 (12:20 IST)
டெல்லி டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய வீச்சாளர் ஷேன் வாட்சனை முழங்கையால் இடித்த விவகாரத்தில் ஒரு போட்டி தடை தண்டனை அனுபவித்த கவுதம் கம்பீர், அதற்காக ஒரு போதும் வருத்தப்படப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

"டெல்லியில் ஆஸ்ட்ரேலியர்கள் பிரயோகப்படுத்திய வார்த்தைகளை ஒருவரும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது, நான் செய்தது தவறு என்றால் மைதானத்தில் வசைச் சொற்களை நிறுத்த வேண்டும், ஆட்டத்தில் அதற்கு இடமேயில்லை" என்கிறார் கம்பீர்.

"அனைத்து முனைகளிலிருந்தும் அவர்கள் வசைச் சொற்களை வீசி வந்தனர், பெங்களூர், மொஹாலி, டெல்லி என்று அனைத்துப் போட்டிகளிலும் அவர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர், ஆனால் அது என் சொந்த விவகாரத்தை தாக்குவதாக இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை"

இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கவேண்டும், என்னை மட்டும் தண்டிக்க முடியாது, நேர்மையாகக் கூறவேண்டுமென்றால் வாட்சனுடன் நடந்த விவகாரத்திற்காக நான் வருத்தப்படப் போவதில்லை" என்று கூறியுள்ளார் கம்பீர்.

இந்த தொடரில் கம்பீர் ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடாத போதும் இரு அணிகளிலும் அதிக ரன்களை சேர்த்த வீரராக திகழ்கிறார். ஒரு இரட்டை சதம், ஒரு சதம் ஆகியவற்றுடன் கம்பீர் 463 ரன்களை இந்த தொடரில் சேர்த்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்