ஐ.சி.எல். வீரர்கள் தீண்டத்தகாதவர்களா?- கபில் தாக்கு!
புதன், 17 செப்டம்பர் 2008 (16:39 IST)
இந்திய முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய ஐ.சி.எல். தலைவருமான கபில்தேவ் ஐ.சி.எல்-இல் இணைந்த கிரிக்கெட் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. காட்டும் பாரபட்சம் குறித்து கடும் தாக்குதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளர்.
ஐ.சி.எல். இரண்டாவது சீசன் அறிமுகத்தின் போது கபில்தேவ், "எங்களுடன் சேர்ந்த வீரர்களை தீண்டத்தகாதவர்கள் போல் கிரிக்கெட் வாரியம் நடத்துவது ஏன் என்று புரியவில்லை. கிரிக்கெட்டிற்கும் வாழ்க்கைக்கும் சில இளம் வீரர்களை நாங்கள் உருவாக்கித் தருகிறோம், வீரர்களை அவர்கள் செய்யாத தவறுக்காக கிரிக்கெட் வாரியம் பழி வாங்கி வருகிறது" என்று கோபாவேசமாக பேசினார்.
"இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குத்தான் நாங்கள் இருக்கிறோம், நான் எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் பகுதியாகவே என்னை கருதுகிறேன், ஆனால் அவர்கள் கிரிக்கெட்டை ஏகபோக உரிமையாக்கியுள்ளார்கள், அவர்களுக்கு பரந்த இதயம் வேண்டும்.
மேலும் எனது வீரர்களுக்காகவே நான் வழக்கை சந்திக்க நேரும் என்று சிந்தித்து கூட பார்க்கவில்லை" என்று அவர் ஐ.சி.எல் வீரர்களுக்கும் அந்த வீரர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையேயான நீதிமன்ற வழக்குகள் குறித்து இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ஐ.சி.எல். வீரர்கள் இவ்வாறு பலிகடாவாக்கப்படுவதற்கு காரணம் ஒரே ஒரு நபர்தான், அந்த குறிப்பிட்ட மனிதரின் பெயரை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, எல்லோருக்கும் அவர் யார் என்று தெரியும்".
"எங்களை சிறுமைப்படுத்த ஏற்படுத்தும் தடைகளையும் மீறி நாங்கள் மேலும் பலம் பெற்று வருகிறோம், நாங்கள் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு கிரிக்கெட்டிற்கான களத்தை அமைத்துக் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம்" என்றார் கபில் தேவ்.
அவர் பி.சி.சி.ஐ. மீது ஒரு முக்கியமான குற்றச்சாற்றையும் எழுப்பியுள்ளார், அதாவது, இந்தியன் கிரிக்கெட் லீகில் இணைந்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை இன்னமும் கொடுக்காமல் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
கபிலின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், "அவர் எதை வேண்டுமானாலும் உளறி விட்டு போகட்டும், எங்களுக்கு கவலையில்லை, எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" என்றார்.
ஆனால், ஐ.சி.எல்-ல் இணைந்த இந்திய வீரர்களுக்கு சேர வேன்டிய தொகைகளை இன்னமும் பி.சி.சி.ஐ. முழுக்க செலுத்தவில்லை என்ற குற்றச்சாற்று குறித்து நிரஞ்சன் ஷா கூறுகையில், "நிலுவைத் தொகைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக பட்டுவாடா செய்துதான் வருகிறோம், சிலர் விடுபட்டுப் போயிருக்கலாம்" என்றார்.