காலேவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்த போது தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. கம்பீர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியில், அணித்தலைவர் ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக விளையாடி 86 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 292 ரன்களுக்கு இலங்கை சுருண்டது.
இலங்கை அணியை விட 37 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 50 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்டமிழந்தார்.
எனினும் மற்றொரு துவக்க வீரர் கம்பீர் தொடர்ந்து நிதானமாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய திராவிட் தேநீர் இடைவேளையின் போது 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார். இப்போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதமுள்ளதாலும், இலங்கையை விட 158 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதாலும் இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.