துவக்க ஆட்டக்கார்கள் சேவாக், கம்பீரின் அதிரடி அரை சதங்களும், அவர்களைத் தொடர்ந்து ரெய்னா, தோனி ஆகியோரின் அபார சதங்களால் ஹாங்காங் அணிக்கு 375 என்று இமலாய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி!
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று கராச்சியில் நடைபெற்றுவரும் 3வது ஒரு நாள் போட்டியில், பூவா-தலையா வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக்கும், கெளதம் கம்பீரும் துவக்கம் முதலே அடித்தாடத் தொடங்கினர். கெளதம் கம்பீரின் ஆட்டம் ஒருநாள் போட்டிகளைப் போன்றும், சேவாக்கின் ஆட்டம் இருபதுக்கு20 பானியிலும் இருந்தது.
27 பந்துகளில் 9 பெளண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் அரை சதத்தைக் கடந்த வீரேந்திர சேவாக், அதற்குப் பிறகும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 44 பந்துகளில் 13 பெளண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கம்பீர், 54 பந்துகளில் 7 பெளண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.3 ஓவர்களில் 127 ரன்களைக் குவித்தனர்.
கம்பீரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா 11 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அதன்பிறகு இணை சேர்ந்த சுரேஷ் ரெய்னாவும், தோனியும் சிறப்பாக விளையாடினர். சுரேஷ் ரெய்னா 50 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் தனது அரை சதத்தை எட்டினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் ஆடிய ஆட்டம் அதிரடியானது.
அடுத்த 16 பந்துகளில் மேலும் 3 பெளண்டரிகளும், 5 சிக்ஸர்களையும் விளாசி தனது சதத்தை அதிரடியாக எட்டி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் 90 பந்துகளில் 5 பெளண்டரிகளுடனும், 6 சிக்ஸர்களுடனும் தனது சதத்தைக் கடந்த தோனி, ஆட்ட நேர இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 109 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை எடுத்தது.