டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. மும்பை அணிக்கு இது 2வது வெற்றியாகும்.
ஐ.பி.எல். சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதியது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் மும்பை அணியை பேட் செய்ய அழைத்தது.
இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த டொமினிக் தோர்னேலி, உத்தப்பா இணை நன்றாக விளையாடியது. இவர்கள் இணை சேர்ந்து 52 ரன்கள் எடுத்திருந்தபோது அடுத்தடுத்து இருவரும் ஆட்டம் இழந்தனர். உத்தப்பா 22 ரன்களும், தோர்னேலி 30 ரன்களும் சேர்த்தனர்.
அணித் தலைவர் பொல்லாக்கின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 150 ரன்களை கடந்தது. இவர் 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் தமிழகத்தை சேர்ந்த யோ மகேஷ் 3 விக்கெட்டுகளும், ஆசிப், சங்க்வான், பாட்டியா, சேவாக், சோயிப் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு, மும்பை பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். கம்பீர் (1), தவான் (1) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். நன்றாக விளையாடிய டிவில்லியர்ஸ் 21 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
இருந்தாலும் மறுமுனையில் சேவாக் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 82 ரன்களாக இருந்தபோது சேவாக், தோர்னேலி பந்து வீச்சில் பொல்லாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இவர் 20 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர், 3 பெளண்டரி அடங்கும்.
சேவாக் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 18.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை அணி தரப்பில் நெக்ரா 3 விக்கெட்டுகளும், பொல்லாக், குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பொல்லாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6 போட்டியில் விளையாடி உள்ள மும்பை அணி தொடர்ந்து 2-வது வெற்றி பெற்றுள்ளது. 6 ஆட்டத்தில் விளையாடி உள்ள டெல்லி அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.