அமெரிக்கா, துபாய் மற்றும் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று தமிழக மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். பிரேசிலில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தமிழக மாணவர் தேர்வாகி உள்ளார்.
சென்னையிலுள்ள எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் இதற்கான ஏற்பாடுகளைச்செய்திருந்தது. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்றனர். இந்த மையத்தின் மூலமாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். டெல்லியிலுள்ள தல்கோத்ரா உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவுகளையும் (ஸ்பான்சர்ஷிப்) எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பல சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்நிறுவனம், வரும் காலத்திலும் சர்வதேச அளவில் பல வெற்றியாளர்களை உருவாக்க, மாணவர்களைத் தயார்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.