67 வயதில் அபார சாதனை படைத்த தமிழக நீச்சல் மன்னன்

திங்கள், 31 அக்டோபர் 2016 (18:20 IST)
தெலுங்கானாவில் நடை பெற்ற தேசிய அளவிலானமாஸ்டர் சாம்பியன் நீச்சல் போட்டியில் பங்கேற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த சாந்தாராம் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.
 

 
அகில இந்திய நீச்சல் கழகம் சார்பில் தெலுங்கானா மாநிலம் ஜெஹந்திராபாத்தில் 13வது தேசிய அளவிலான மாஸ்டர் சாம்பியன் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 67 வயதாகும் சாந்தாராம் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கம் வென்றார்.
 
இதில் அவர், பந்தைய தூரத்தை 3 நிமிடம் 12 நொடிகளில் கடந்து சாதனை புரிந்தார். இவர், காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் என 13 பதக்கங்களை வென்றுள்ள சாந்தாராம் தனது இளம் வயது முதல் நீச்சல் பயிற்சி மீது ஆர்வம் கொண்டவர்.
 
தனது சிறு வயது முதலே, ஏரி மற்றும் விவசாய கிணறுகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் பின்பு, கடந்த 2010ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் துவங்கப்பட்டதும், அங்கு சேர்ந்து மீண்டும் தனது நீச்சல் பயிற்சியை தொடர்ந்தார்.
 
பயிற்சியை துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே தமிழக அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க சாந்தாராம் தகுதி பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்