இந்திய அணியின் கேப்டன் ஆனார் பும்ரா.. ரோஹித் சர்மா விலகியது ஏன்?

Siva

திங்கள், 18 நவம்பர் 2024 (06:59 IST)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடரின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருந்த ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இதனை அடுத்து, அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரம் செலவிட கால அவகாசம் தேவை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனை அடுத்து, இந்தியாவின் கேப்டனாக பும்ரா பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவுக்கு தற்போது குடும்பத்துடன் செலவிட நேரம் தேவைப்படுவதால், முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்றும், அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியான பிங்க்பால் போட்டிக்கு அவர் ஆஸ்திரேலியா செல்வார் என்றும் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஒன்பது நாட்கள் இடைவெளி உள்ளதால், ரோஹித் சர்மாவுக்கு சரியான நேரம் கிடைக்கும் என்றும் பி.சி.சி.ஐ. அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்