பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்போது தன் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர் நியுசிலாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்ததாகவும் பாபர் கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்பே அவரை தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாபர் காதலை வெளிப்படுத்தியதாகவும், தன்னிடம் உடலுறவு கொண்டு தான் கர்ப்பமானது தெரிந்ததும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாபர் ஆசமின் கேப்டன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் பேசியுள்ளார். அதில் நான் கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பில் இருக்கும் வரை பாபர் ஆஸம் கேப்டனாக நீடிப்பார். அவர் மிகவும் உறுதியான வீரர். சிறந்த மற்றும் இளமையான வீரர். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் அவரை கேப்டனாக நியமித்தோம். மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்க அவரும் ஆர்வத்துடன் இருந்தார். எனக் கூறியுள்ளார்.