ரொம்ப ஓவரா பண்ணிட்டோம்.. மன்னிச்சிடுங்க! – ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள்!

புதன், 24 மே 2023 (11:57 IST)
நேற்று சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்து ஜடேஜா போட்ட ட்வீட் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தனது பங்கை ஆற்றியுள்ளனர்.

சிஎஸ்கே ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நேற்றைய போட்டியில் 16 பந்துகளில் 22 ரன்களை பெற்றதுடன், பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ஷனாகா, டேவிட் மில்லரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சாதகமாக செயல்பட்டார். ஜடேஜாவின் ஆட்டத்தை பாராட்டி அவருக்கு அப்ஸ்டாக்ஸ் Most Valuable asset of the match (இந்த போட்டியின் மதிப்புமிக்க சொத்து) என்ற விருதை வழங்கியது.



இதை ட்விட்டரில் பதிவிட்ட ஜடேஜா “அப்ஸ்டாக்ஸுக்கு தெரியுது.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு தெரியல” என கிண்டலாக பதிவிட்டிருந்தார். கடந்த ஐபிஎல் லீக் போட்டிகளில் ஒவ்வொரு முறை ஜடேஜா களம் இறங்கும்போதும், அடுத்து தோனி வரவேண்டும் என்பதற்காக ஜடேஜாவை வெளியேற சொல்லி சிஎஸ்கே ரசிகர்களே போர்டு பிடித்தது அவரை வருத்ததிற்கு உள்ளாக்கியது. இதுகுறித்து அவர் சக வீரர் தீபக் சஹாரிடம் புலம்பி இருந்தார்.

பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஜடேஜாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ‘தோனியின் ஆட்டத்தை பார்க்க விரும்பினால் “சீக்கிரம் களம் இறங்குங்க தோனி” என போர்டு பிடிக்கலாம். ஆனால் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ஜடேஜா மாதிரியான வீரர்களை “சீக்கிரம் அவுட் ஆகுங்கள்” என போர்டு பிடிப்பது, எந்த ஒரு மனிதரையும் தன்மானத்தை சீண்டி பார்க்கும் செயலாகும்’ என பலரும் அமெர்ச்சூர் ரசிகர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்டு வருவதுடன், நீங்கள் சிஎஸ்கேவின் மதிப்பு மிக்க சொத்து என அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்