பிள்ளையாருக்கு கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது தெரியுமா....?

ஞானபாலி என்பவன் சத்தியமே வடிவான உத்தம அரசன். முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தன். விநாயகரின் பக்தனாக நாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்து வந்தபோதும், ஒருமுறை பெரும் பஞ்சம் வந்துவிட்டது. 

ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான் ஞானபாலி. யாகத்தின் நடுவே அரசனின் விதி தனது வேலையைத் தொடங்கியது.  ஆம், அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து  மேனகையின் பின்னே சென்றான். பின்னே வந்த அரசனை எச்சரித்துவிட்டு மேனகை மறைந்தாள்.
 
ஏமாந்து போன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில் நின்றதால் பெரும் ஆபத்து நேரும் என்று ராஜ குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார். அதைக் கண்டுகொள்ளாமல் நின்று போன யாகத்தைத் தொடங்கிய  ஞானபாலியை அஷ்ட திக் பாலர்கள் தோன்றி சபித்தனர். இதனால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி.
 
கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் பிடித்து உண்டான் ஞானபாலி. கொடிய அரக்கனாக மாறி சகல உயிரினங்களையும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான். பூமிக்கே பெரும் அச்சுறுத்தலான ஞானபாலியை எந்த தேவர்களாலும் அழிக்க முடியவில்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி  இருந்ததே காரணம் என்று பூமாதேவி அறிந்துகொண்டாள்.
 
தன் மக்களைக் காக்க கணபதியை வேண்டினாள். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும், பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார்.  
 
கண்ணீரோடு விழுந்து வணங்கி, தன்னை ரட்சித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். தனது பெரும்பசியை போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுதான், கண்ணீரால் தொழுதான்.
 
திருவுள்ளம் கொண்ட கணபதி கடவுள், விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்கட்டை வடிவமாக்கி  விழுங்கிவிட்டார்.
 
இப்படியாக கணபதிக் கடவுளின் பக்தனான ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்துகொண்டான். அன்றிலிருந்து அவருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டையாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலியின் நினைவாக கொழுக்கட்டையைச் செய்து  படைத்து வருகிறோம். ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம் என்பதே கொழுக்கட்டையின்  தத்துவம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்