வெட்டி பந்தாவா.. தோல்வி பயமா.. பாஜகவிடம் ஆதரவு கோருமா அதிமுக?
வியாழன், 26 செப்டம்பர் 2019 (13:09 IST)
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு பாஜகவிடம் ஆதரவு கோருமா அதிமுக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்குநேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை அறிவித்த கையோடு அதிமுக தரப்பு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவும் கோரியுள்ளது.
அதன்படி விஜயகாந்தின் தேமுதிகவிடமும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிடமும் ஆதரவு கோரியது. ஏற்கனவே பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கூட்டணியில் பாக்கியுள்ள பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு பாஜகவில் தற்போது தலைமை இல்லாத நிலையில், அதிமுக தனது ஆதரவை தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயலிடம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக தெரியவில்லை.
சமீபத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்ய நினைக்க வேண்டாம் என எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என பேசப்பட்ட நிலையில், அதிமுக பாஜகவிடம் ஆதரவு கேட்காது என தெரிகிறது. இதற்கு தலைமை இல்லாததை ஒரு காரணமாக பயன்படுத்திக்கொள்ளும் என கூறப்படுகிறது.
இப்படியில்லை என்றால் பாஜக - அதிமுக இரு கட்சிகளும் வெளியில் சம்மந்தம் இல்லாதது போல காட்டிக்கொண்டு, இந்த தேர்தலில் வெற்றியின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமா எனவும் சிந்திக்க தோன்றுகிறது.