மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் இடம் கொடுத்து உள்ள நிலையில், தமிழிசையை பாஜக கைவிட்டு விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது என்றும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆகக்கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக தான் முடிவு செய்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி, தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை செளந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது என கடுமையாக சாடினார்.