ஜெயலலிதா பற்றி வெளிவராத உண்மை: கேட்கும் போதே தலை சுற்றுதே!
திங்கள், 25 செப்டம்பர் 2017 (15:16 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது. இந்த மரணம் குறித்து தற்போது அமைச்சர்கள், சசிகலா உறவினர்கள், ஜெயலலிதாவின் வாரிசு என பலரும் கூறும் கருத்துக்கள் மர்மத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் நாங்கள் பார்த்தோம், அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், நலமாக இருக்கிறோம் என ஜெயலலிதா சிகிச்சை பெறும் நேரத்தில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கூறினர். ஆனால் தற்போது அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதனை மறுத்துள்ளார். நாங்கள் அப்போது பொய் கூறினோம், யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. சசிகலா அதற்கு அனுமதிக்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் குண்டை தூக்கி போட்டார்.
ஜெயலலிதா விவகாரத்தில் தாங்கள் கூறிய அனைத்தும் பொய் என மக்கள் மத்தியில் பொறுப்புள்ள அமைச்சரே கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் மேலும் என்னென்ன பொய் கூறியுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ தங்களிடம் உள்ளதாக தினகரன் கூறியுள்ளார். ஆனால் முன்னதாக மருத்துவர்கள் சந்திப்பில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ எடுக்கப்படவில்லை என கூறினார்கள்.
இதே மருத்துவர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவை ஆளுநர் முதலில் வந்து பார்த்தபோது அவருக்கு ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தலைவர் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் இரண்டாவது முறையாக வந்தபோது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதாவை கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து ஆளுநர் பார்த்தார். அப்போது ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்தி ஆளுநரிடம் காட்டினார். பதிலுக்கு அவரும் கையை உயர்த்தி கட்டை விரலை காட்டினார் என கூறினார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் அளித்துள்ள தகவல் இதுவரை வெளிவராத ஒன்று. அதை கேட்டாலே தலை சுற்றுகிறது. ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக கூறப்பட்ட தகவல் பொய். அந்த நேரத்தில் ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை. நான் அப்போது மருத்துவமனையில் தான் இருந்தேன் என தீபக் கூறினார்.
ஆளுநரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்ததாக மருத்துவரே ஏன் பொய் கூற வேண்டும். அவரை அந்த பொய்யை கூற வைத்தது யார். இதனை ஊடகங்களில் பார்த்த ஆளுநர் ஏன் அது பொய் என கூறாமல் மௌனம் காத்தார் என பல கேள்விகள் எழுகின்றன. அப்படியென்றால் ஜெயலலிதா விவகாரத்தில் எதுதான் உண்மை.
அனைவரும் சேர்ந்து ஒரு முதலமைச்சருக்கு என்ன ஆனது என்பதை நாட்டு மக்களுக்கு மறைப்பதற்கு காரணம் என்ன?. மருத்துவர்கள் உட்பட பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதால் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்த கேள்வி தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.