ஜெ. உடல்நிலை குறித்த அறிக்கையை நம்புவதா, வேண்டாமா? - ஜி.கே.வாசன் அதிரடி
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:41 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மருத்துவமனை அறிக்கையை அரசியல் கட்சி தலைவர்கள் நம்பலாம். சிலர் நம்பாமல் இருக்கலாம். இது அவர்களின் விருப்பம் என்றும் நாங்கள் முதலமைச்சர் உடல் நிலையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய வாசன், “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையை அரசியல் கட்சி தலைவர்கள் நம்பலாம். சிலர் நம்பாமல் இருக்கலாம். இது அவர்களின் விருப்பம்.
எங்களை பொறுத்தவரையில் நாங்கள் முதலமைச்சர் உடல் நிலையை அரசியலாக்க விரும்பவில்லை. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆட்சியாளர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நேரத்தில் அனைத்து துறைகளும் தொய்வின்றி செயல்பட முதலமைச்சர் வகித்து வந்த துறைகளை நிதி அமைச்சருக்கு கவர்னர் ஒதுக்கி கொடுத்துள்ளார். இது சட்ட ரீதியான நடவடிக்கை. இந்த முடிவு அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.