தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சென்ற சட்டசபை தேர்தலில் இருந்த இரு பெரும் தலைவர்கள் தற்போது இல்லாததால் அரசியலில் பல்வேறு போட்டிகள் முளைத்துள்ளன. அதிமுக, திமுக வழக்கமான பலத்தோடு இருந்தாலும் புதியதாக வளர்ந்து வரும் கட்சிகள் அதிகரிப்பது வாக்குகளை பிரித்துவிடும் அபாயமும் இருக்கிறது.
ஒரு பக்கம் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி வெற்றிகரமாக முன்னகர்த்தி கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் மக்கள் எழுச்சிக்கு பிறகு கட்சி தொடங்கலாம் என ரஜினிகாந்த் காத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வருவார் என அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தமிழக அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஏற்கனவே விஜய் படங்களுக்கு அரசியல்ரீதியாக பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. தற்போது மாஸ்டர் படம் வெளியாக உள்ள சூழலில் இந்த தீர்மானம் அரசியல்ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.