ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படாது - திருமாவளவன்

வியாழன், 28 மே 2015 (16:51 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தங்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் எடுத்த நிலைப்பாட்டினை, ஆர்.கே.நகர் இடைதேர்தலிலும் எடுத்துள்ளோம். இந்த இடைதேர்தலில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படாது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது.
 
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த கருத்தரங்கம் வரும் ஜுன் 9 ஆம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கருத்தரங்கில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மியான்மரில் முஸ்லிம்கள் இனஓழிப்பு படுகொலையில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட்டு இனஒழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சார்க் அமைப்பை இந்தியா கூட்ட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்