சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள கிராம மக்கள் கண்மாயில் உள்ள மடையை தெய்வமாக நினைத்து 280 கிடா வெட்டி வழிபாடு செய்ததுடன் ஆண்கள் மட்டுமே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கிடா விருந்தும் நடைபெற்றது.
சிவகங்கையை அடுத்து அமைந்துள்ளது திருமலை கிராமம். இங்குள்ள விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் கண்மாயில் விவசாய காலங்களில் தண்ணீர் திறக்கப்படும் மடையையே இக்கிராம மக்கள் மடைக் கருப்பணசாமியாக நினைத்து வழிபாடு செய்து வருவதுடன் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பங்கேற்று கிடா வெட்டி திருவிழாவும் கொண்டாடிவருகின்றனர்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த திருவிழாவானது கொண்டாடப்பட்டது. இங்கு தங்களின் விருப்பத்தினை நினைத்து வேண்டி செல்வதும் பின்னர் வேண்டுதல் நிறைவேறினால் அதற்கு கருப்பு நிற ஆடுகளை மட்டும் மடைக்கருப்பண சாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இதில் இந்த ஆண்டு கிராமத்தினர் வேண்டுதல் நிறைவேறியதின் பலனாக 280 கருப்பு நிற ஆடுகளை வழங்கிய நிலையில் அதனை பலிகொடுத்து மடை கருப்பண சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமத்தினர் கெளலி வரம் கேட்டு அது கிடைத்த பின்னர் பச்சரிசி சாதமும் மனமனக்கும் கறிக்குழம்பு மற்றும் ரசத்துடன் விருந்தும் வைத்தனர்.