கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான சங்கர். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி உள்ளார். சமீபத்தில் கங்காதேவியின் தம்பி சவுந்திரபாண்டியன், உறவுக்காரர்களான கருப்பையா மற்றும் ரத்தினம் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள திருநாவலூர் குடியிருப்பு பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட சங்கர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக திருநாவலூர் பகுதியில் உள்ள வயல்பக்கமாக இரவு நேரத்தில் ரகசியமாக ஊடுறுவி சென்றுள்ளனர். அந்த பகுதியில் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த கோவிந்தசாமி என்ற விவசாயி வயலை சுற்றி மின்வேலி அமைத்திருந்துள்ளார். இது தெரியாமல் சங்கர் வேலியை தாண்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கரின் மைத்துனர் சவுந்திரபாண்டியன் மற்றும் உறவுக்கார நபர்கள் உடலை எடுத்து செல்ல பயந்து அங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதையறியாமல் சங்கர் மனைவி கங்கா தேவி தனது கணவர் காணாமல் போய்விட்டதாக தொடர்ந்து தேடி வந்துள்ளார். அக்காளின் துயரத்தை கண்டு ஒரு சில நாட்களுக்கு பிறகு நடந்த சம்பவத்தை கங்கா தேவியிடம் சௌந்திரபாண்டியன் சொல்லிவிட்டார்.
கோவிந்தசாமி சில நாட்களுக்கு முன் வயலுக்கு சென்றபோது அங்கு சங்கர் இறந்து கிடந்த நிலையில் வழக்குகளுக்கு பயந்து அவரது உடலை அருகில் இருந்த ஏரியில் வீசிவிட்டதாக கோவிந்தசாமி ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் கோவிந்தசாமி குறிப்பிட்ட இடத்திலிருந்து சங்கர் உடலை மீட்ட போலீஸார், விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயி கோவிந்தசாமியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.