மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு மறந்து விட்டது: மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

வெள்ளி, 5 ஜூன் 2015 (11:18 IST)
மீனவர்களை பாதுகாப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு மறந்து விட்டது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
மீனவர்களை பாதுகாப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு மறந்து விட்டது. மீனவர் பாதுகாப்பு படை அமைப்போம் என்றார்கள்.  4 வருடங்களாகியும் அந்தப் படை இதுவரை அமைக்கப்படவில்லை.
 
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்து விட்டது என்று அதிமுக அரசு கருதுகிறது. ஜனவரி 2014ல் இருந்து மார்ச் 2015 க்குள் 937 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இப்போது மீன் பிடி காலம் துவங்கிய உடன் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.
 
சவுதி அரேபிய கடற்பகுதியில் ஏழு பேரோடு மீன் பிடித்த குமரி மாவட்டம் பொழிக்கரையைச் சேர்ந்த மதிவாளன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். நம் மாநில அரசு மீன்பிடி விதிகள் குறித்து மீனவர்களுக்கு கற்றுக் கொடுக்கவோ அல்லது அவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளையோ செய்து கொடுக்கவும் இல்லை.
 
மறந்து போன மற்ற வாக்குறுதிகள் போல் அல்லாமல், மீனவர் பாதுகாப்பு படை அமைப்போம் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டு கொள்வதோடு கொடுத்த வாக்குறுதிகளுக்கு அதிமுக அரசு தான் பொறுப்பு என்பதை நினைவுபடுத்தவும் விரும்புகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்