ஓபிஎஸ் அணிக்கு டிமிக்கி கொடுத்த வக்கீல்: சதி செய்த தினகரன் தரப்பு!

புதன், 22 மார்ச் 2017 (15:00 IST)
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் எந்த அணிக்கு சொந்தம் என்ற இறுதி விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்காக சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கட்டி வருகின்றனர்.


 
 
இதில் ஓபிஎஸ் அணி சார்பாக ஆஜராகி வாதாட முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே உறுதியளித்திருந்தார். சசிகலா தரப்பில் ஆஜராக மோகன் பராசரன் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் இருவருக்கும் அனல் பறக்கும் வாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இன்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதாட ஹரிஷ் சால்வே வரவில்லை. இதனால் ஓபிஎஸ் தர்ப்பு அதிர்ச்சியடைந்தது. இதனால் ஓபிஎஸ் அணி சார்பாக எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர்.
 
சசிகலா தரப்பில் மோகன் பராசரன், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஹரிஷ் சால்வே ஏன் ஆஜராகவில்லை என விசாரித்த போது அதிமுக வட்டாரத்தில், ஒரு வாரத்திற்கு முன்னரே ஹரிஷ் சால்வே ஆஜராக முடியாது என கை விரித்து விட்டதாகவும், முதலில் ஆஜராக உறுதியளித்த ஹரிஷ் சால்வே பின்னர் மறுத்ததற்கு காரணம் டிடிவி தினகரன் ஆட்களின் உள்ளடி வேலைகள் என கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்