தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். தங்களின் பாரம்பரிய உரிமைக்காக போராடும் மக்களை ஒரு ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுக்கிகள் என தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என வலியுறுத்தி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்து தான் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என விமர்சித்துள்ளாரா என விளக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது.