எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் விழா எடுப்போம்!? – பல்டி அடித்த ஸ்டாலின்
வியாழன், 5 செப்டம்பர் 2019 (12:58 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளதை விமர்சித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென மாற்றி பேசியிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து சென்ற முதல்வர் அங்குள்ள கால்நடை பண்ணைகள் முதலானவற்றை பார்வையிட்டார். பிறகு இங்கிலாந்துடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்ட அவர் தற்போது அமெரிக்கா சென்றிருக்கிறார்.
நேற்று அமெரிக்க வாழ் தமிழர்களிடையே பேசிய முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரும் என்று தெரிவித்தார். இந்த பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமியோடு மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் “தமிழக அமைச்சரவை தற்போது சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது” என்று விமர்சித்தார். இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் பல நிறுவனங்களோடு தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன.
திருப்பூரில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது “முதலீடுகளை ஈர்ப்பதை திமுக எதிர்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்த இரண்டாவது முதலீட்டாளர் மாநாட்டில் 220 நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டதாக அவர் கூறியிருப்பது வடிக்கட்டிய பொய். முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களே நிறைவேற்ற முடியாத நிலையில்தான் முதல்வர் 2740 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க போவதாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சொன்னபடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிகரமாக முதலீடுகளை ஈர்த்து நாடு திரும்பினால் அவருக்கு திமுக சார்பில் பாராட்டுவிழா நடத்துவோம்” என கூறியுள்ளார்.
முதல்வரின் அமெரிக்க பயணத்தை நேற்றுவரை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின் திடீரென பல்டி அடித்து இப்படி பேசியிருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பேச்சை கேட்ட அதிமுகவினர் அப்படியென்றால் பாராட்டுவிழா பணிகளை தொடங்க தயாராக இருங்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனராம்.