கருணாநிதி குறித்து நல்ல செய்தி: பூரிக்கும் ராமதாஸ்

புதன், 21 டிசம்பர் 2016 (10:39 IST)
கருணாநிதி இன்னும் 2, 3 நாட்களில் உடல்நலம் தேறி வீடு செல்வார் என்ற நல்ல செய்தியை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சொன்னார்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 7ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தொடர் சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறிவிட்டார். இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும், பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து சிறிது நாட்கள் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ராமதாஸ், காவிரி மருத்துவமனைக்குச் சென்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘என் இனிய நண்பர் கலைஞரின் உடல்நலம் விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அவர் இன்னும் 2, 3 நாட்களில் உடல்நலம் தேறி வீடு செல்வார் என்ற நல்ல செய்தியை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சொன்னார்கள்.

அவர் 100 வயதை கடந்து வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவர் நலம் பெற்று வீடு திரும்பியதும் ஒரு நாள் அவரை வீட்டிற்கு சென்று பார்க்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்