கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த புகாரில், கடந்தாண்டு ஜூன் மாதம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
இது தொடர்பாக செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார். எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.