சசிகலாவின் புகைப்படங்கள் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அகற்றம்!
திங்கள், 24 ஏப்ரல் 2017 (10:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அவரது மறைவிற்கு பின்னர் தற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவரது தேர்வு அதிமுக சட்ட விதிகளின் படி தவறு என ஓபிஎஸ் அணி மல்லுக்கட்டி வருகிறது. சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றியதும் அவரது புகைப்படம் அடங்கிய பேனர்கள் அதிகமாக அதிமுக தலைமை கழகத்தை ஆக்ரமித்து இருந்தது.
ஜெயலலிதா இருக்கும் வரை சசிகலாவின் புகைப்படம் எதிலும் இடம் பெறாது. ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும் சசிகலாவின் புகைப்படமே பிரதானப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
அதன் பின்னர் சசிகலாவின் புகைப்படத்தை உபயோகிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தனர் அதிமுகவினர். அதன் உச்சக்கட்டமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது சசிகலாவின் பெயர் மற்றும் புகைப்படம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. இதனை செய்தது சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிமுகவின் தலைமை அலுவகத்தில் சசிகலாவின் புகைப்படங்கள் இருக்கத்தான் செய்தது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிணைவதற்கான சூழல் நிலவி வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி வைக்கும் முதன்மை கோரிக்கை சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதாகும்.
இந்த அணிகள் ஒன்றிணைப்பிற்கான பேச்சுவார்த்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தான் நடைபெற உள்ளது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பேனர் மட்டுமே உள்ளது.