விசாரணை ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரம் : ஓ.பி.எஸ்-க்கு ஆப்பு வைக்கும் சசிகலா

சனி, 24 மார்ச் 2018 (13:29 IST)
ஜெ. வின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலா சமர்பித்த பிரமாணப் பத்திரம் மூலம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

 
தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ், மருத்துவமனையில் தான் உட்பட ஜெ.வை யாரும் பார்க்கவில்லை எனவும், அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி அணிக்கு முக்கிய நிபந்தனை வைத்தார். அதன்பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பின்னரே எடப்பாடி அணியுடன் ஓ.பி.எஸ் தனது அணியை இணைத்தார்.
 
ஆனால், சமீபத்தில் தனது வாக்குமூலத்தை பிரமாணப் பாத்திரமாக தாக்கல் செய்த சசிகலா “செப்.22ம் தேதி மருத்துவனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். 23ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் அவருக்கு ஸ்கேன் எடுக்க இரண்டாவது மாடியிலிருந்து முதல் மாடிக்கு அழைத்து செல்லப்பட்ட போது, அங்கு நின்றிருந்த அவரது தனிப்பாதுகாவலர்கள் வீரபெருமாள் மற்றும் பெருமாள்சாமியிடம் ‘ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீக்கிரம் வீட்டிற்கு வந்து விடுவேன்’ எனக் கூறிவிட்டு சென்றார். அப்போது, அங்கு அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
அதேபோல், நவ.19ம் தேதி தனி அறைக்கு ஜெ. மாற்றப்பட்ட போது அமைச்சர்கள் நிலோபர் கபில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பார்த்தனர். அப்போது ஜெ.வின் அனுமதியுடன் வீடியோ எடுத்தேன் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓ.பி.எஸ்-ஐ விசாரணை ஆணையம் விசாரிக்க சசிகலா தரப்பு வலியுறுத்தும் எனத்தெரிகிறது. இதில்தான் ஓ.பி.எஸ்-க்கு சிக்கல் தொடங்குகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தில், நான் ஜெ.வை பார்க்கவில்லை எனக் கூறினால் சசிகலா தரப்பு அதற்கான ஆதார வீடியோவை வெளியிடும். பார்த்தேன் எனக் கூறினால், அவர் நடத்திய தர்ம யுத்தமே போலி எனத் தெரிந்துவிடும்.
 
எனவே, என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஓ.பி.எஸ் தரப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்