உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.
கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்!
தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்!