மதுரை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், அவரைக் காணவில்லை என மதுரையின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரையின் முக்கிய பகுதிகளான வண்டியூர், சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட இடங்களில், வெங்கடேசன் எம்பிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் "கண்டா வரச் சொல்லுங்கள்" என்ற தலைப்பில், "மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக எம்பியாக பதவியேற்ற வெங்கடேசன் வண்டியூர் பகுதி மக்களுக்கு நன்றி கூற வரவில்லை" என்றும், "உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டி, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கடேசன், பொதுமக்களிடம் வந்து குறைகள் கேட்பதில்லை என்றும், அடிப்படை வசதிகள் கூட இன்னும் செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரையின் பல பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன என்றும், சமீபத்தில் பெய்த மழையால் மதுரையில் வெள்ளநீர் புகுந்ததையும் ஆய்வு செய்ய எம்பி வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.