கும்பகோணத்தில் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை விருந்துக்கு பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஊருக்கு சென்றபோது அங்கு பெண்ணின் அண்ணன் மற்றும் ஒருவர் சேர்ந்து இருவரையும் வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆணவ கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் “கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.