பெண்களுக்கு மாதம் ரூ.1000! பணம் வரலைன்னா என்ன செய்யணும்?

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:39 IST)
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதம் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



அரசு வேலையில் இருப்பவர்கள், ஆண்டிற்கு 3600 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள், சொந்தமாக கார், ட்ராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகையை செலுத்தும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. உரிமைத் தொகை பெற தகுதி வாய்ந்த பெண்களின் வங்கி கணக்கிற்கு ஏடிஎம் அட்டை இல்லாவிட்டாலும் பணம் செலுத்தப்படும் என்றும், பணம் செலுத்தப்பட்டதும் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணம் அனுப்பிவிட்டதாக குறுஞ்செய்தி வந்தும், வங்கி கணக்கில் பணம் ஏறாமல் இருந்தால் அதுகுறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொடர்பு எண்ணும் விரைவில் வழங்கப்பட உள்ளது. பணம் பெறுவது தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த உதவி எண் செப்டம்பர் 15 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்