சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வரும் நிலையில் காவலர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக விசாரணை அறிக்கையை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சமர்பித்துள்ளார். விசாரணை மேற்கொண்டபோது பெண் காவலர் உண்மையை சொல்ல முன் வந்ததாகவும், அதற்கு சக காவலர்கள் அவரை மிரட்டும் பாணியில் பேசியதாகவும் கூறியுள்ள அவர், பெண் காவலர் மற்றும் அவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் வாக்குமூலம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்து சென்று விடிய விடிய லத்தியால் அடித்தது வாக்குமூலத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. லத்தி மற்றும் மேசையில் ரத்த கறை இருந்தது சாட்சியத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் காவலர்களிடம் லத்திகளை பறிமுதல் செய்தபோது ஒரு காவலர் லத்தியை தர மறுத்து தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் லத்தியை தர மறுத்த மற்றொரு காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட்டை தகாத வார்த்தையால் மிரட்டியதும் தெளிவாகியுள்ளது.