ரூட்டு மாறும் சின்மயி விவகாரம் - சிக்கும் பிரபலங்கள்
வியாழன், 11 அக்டோபர் 2018 (15:52 IST)
பாடகி சின்மயியை தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.
சமீபகாலமாக #Metoo மற்றும் #Metooindia என்கிற ஹேஷ்டேக்கில் நடிகைகள், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் தாங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். பாலியல் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் விகாஸ் மீது புகார் தெரிவித்தார். அவர்களை தொடர்ந்து பாலிவுட்டில் பல பெண்கள், சினிமா பிரபலங்கள் மீது தைரியமாக புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாடகி சின்மயி பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் மீது பாலியல் புகார் கூறினார். தனக்கு ஆதரவளிப்பதாக கூறி தன்னிடம் தவறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் எனக்கூறி பிள்ளையார் சுழியை போட்டார். அதற்கு ஆதரமாக வாட்ஸ்-அப் உரையாடல்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின், அதிர்ச்சி அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறினார். 13 ஆண்டுகளுக்கு முன்பு, பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சின்மயி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த விவகாரம் அதிக அளவில் விவாதிக்கப்படவே, பிரபலங்கள் மற்றும் விஐபிக்களிடம் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக பல பெண்கள், சின்மயியிடம் கூறி வருகின்றனர். அவர்களின் பெயரை மறைத்துவிட்டு அந்த பெண்களின் பதிவுகளை சின்மயி டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இதில் பிரபல பாடகர் கார்த்திக்கும் சிக்கியுள்ளார். அந்த டுவீட்டில் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது ‘சில வருடங்களுக்கு முன் கார்த்திக்கோடு ஒரு பொது நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் எனது உடலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். என்னை தொட அடிக்கடி முயன்றார். எனக்கு பயங்கரமான அசௌகர்யத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தினார்’ என அப்பெண் கூறியிருந்தார்
அதேபோல், இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். மும்பையில் என் அறையில் என் தோழிக்காக காத்திருந்தேன். அப்போது, அங்கு தங்கியிருந்த மலிங்கா அவரின் அறையில் என் தோழி இருப்பதாக கூறினார். எனவே, நான் அவரின் அறைக்கு சென்றேன். அப்போது என்னை படுக்கையில் தள்ளி என் மீது அவர் பாய்ந்தார். என்னால் அவரை தடுக்க முடியவில்லை. எனது கண்களையும், வாயையும் மூடிக்கொண்டேன். அப்போது, ஹோட்டல் ஊழியர் கதவை தட்ட, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிவிட்டேன்” என அப்பெண் கூறியுள்ளார்.
அதற்கடுத்து, பிராமண சங்க தலைவர் நாராயணன், மிருதங்க வித்வான் ஆர்.ரமேஷ், வித்வான் திருச்சி ஜெ.வெங்கட்ராமன்,மன்னார்குடி ஈஸ்வரன்,மேண்டலின் ராஜேஷ் ஆகியோர் மீது ஒரு பல பெண்கள் பாலியல் புகார்களை கூறியுள்ளனர். இப்படி தொடர்ந்து பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை சின்மயி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் தெரிவிக்கும் பாலியல் புகார்களுக்கு சித்தார்த், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும், பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், அமீர்கான் உள்ளிட்ட நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போவதால், இன்னும் எத்தனை பிரலங்கள் மற்றும் பெரிய மனிதர்கள் இதில் சிக்குவார்களோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.