5 எஸ் விருது பெறும் கரூர் அரசு பள்ளி - வீடியோ

வியாழன், 25 ஜனவரி 2018 (16:39 IST)
வெற்றிக்கான ஜப்பான் மந்திரமான 5 எஸ் முறை கரூர் அருகே உள்ள அரசுப்பள்ளியில் கடைபிடிப்பதோடு, அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வீடுகளிலும் கடைபிடிக்கும் நிலையில் இந்திய அளவில் அந்த அரசுப்பள்ளிக்கு 5 எஸ் விருது வழங்கப்பட உள்ளது.

 
கரூர் அருகே உள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியானது ஏற்கனவே  பள்ளி மேலாண்மை குழுவினர் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால், இப்பள்ளியானது, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் துரிய செயல்பாட்டினாலும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வினாலும் 5.எஸ் முறையில் கலக்குகின்றது.
 
ஜப்பானின் 5 S முறை
 
5 எஸ் என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும். இது ஜப்பானியர்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானிய பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் .
 
1வது எஸ் - செய்றி - வகைப்படுத்து (Sort)
2 வது எஸ் - செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
3 வது எஸ் - செய்ச்சோ - ஒளிர் (Shine)
4 வது எஸ் - செய்கொட்சு - தரப்படுத்து (Standardize)
5 வது எஸ் - ஷிட்சுகே - நீடிக்கச் செய் (Sustain)
 
இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குபடுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.
 
1வது எஸ் - செய்றி - வகைப்படுத்து (Sort)
 
இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றதை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும்.
 
2 வது எஸ் - செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
 
இது பொருட்களுக்குரிய இடத்தையும் ,இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து பெயர்க்குறியீட்டுடன் பராமரிக்கும் செயலாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
 
3 வது எஸ் - செய்ச்சோ - ஒளிர் (Shine)
 
இது பொருட்களையும் பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும் , பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்வதை வழக்கப்படுத்தி கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகின்றது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமானால் அவற்றை வெளிப்படுத்தவும் நீக்கவும் இம்முறையால் முடிகின்றது. இதனால் வாடிக்கையாளருக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகின்றது.
 
4 வது எஸ் - செய்கொட்சு - தரப்படுத்து (Standardize)
 
இது முன் சொல்லப்பட்ட 3 செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல்லாகும். இந்த வரையறைகள் பொறுப்புக்கள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
 
5 வது எஸ் - ஷிட்சுகே - நீடிக்கச் செய் (Sustain)
 
இது முன் சொல்லப்பட்ட 4 செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.
 
ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை அழகாகவும் நேர்த்தியாகவும் வாழ ஆசைப்படுவதும் முயற்சிப்பதும் இயற்கை. அதன் பொருட்டு நல்ல விடயங்களின்பால் தேடல்களும், அவை தொடர்பான பின்பற்றுகைகளும் நமக்குள் இருக்க வேண்டும். இதற்கு ஜப்பானின் 5 எஸ் முறையும் நமக்கு பயிற்சியளிக்கின்றது
 
இந்நிலையில், இந்த முறையை கரூர் அருகே உள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடைபிடித்து வருவதோடு, இந்த பள்ளிக்கு 5 எஸ் விருதும் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதுவும் ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதன்முறையாக, இந்திய அளவில் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும், 
 
மேலும் 5 எஸ் என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறைக்கான விருது வாங்க இருக்கும் இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வீடுகளிலும் இதே 5 எஸ் முறை கடைபிடிக்கப்படுவதும் ஆச்சரியத்தை ஊக்குவிக்கின்றது. இந்த 5 எஸ் முறையை ஊக்குவிக்கும் மற்றும் விருதுகள் வழங்கும் குழுவான குவாலிட்டி சர்க்கிள் பார்ம் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஷ்ரிவஷ்டவா, துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழு இந்த பள்ளியினை ஆய்வு செய்ததோடு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளையும், பெற்றோர்களையும் நேரில் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
 
பேட்டி : சங்கரசுப்பிரமணியன் – துணை தலைவர் – குவாலிட்டி சர்க்கிள் பார்ம் ஆப் இந்தியா
ஸ்ரீவஸ்த்வா – நிர்வாக இயக்குநர் – குவாலிட்டி சர்க்கிள் பார்ம் ஆப் இந்தியா (பேட்டி ஆங்கிலத்தில் அளித்துள்ளார்)
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்