முதல்வர் கமல்; அது சினிமாவில் தான் நடக்கும்: கிண்டலடிக்கும் அமைச்சர்!
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (16:12 IST)
மக்களுக்காக முதல்வராக விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியதையடுத்து அதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கிண்டலடித்துள்ளார். அவரால் சினிமாவில் மட்டும் தான் முதல்வராக முடியும் என கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது வாயாலே நேற்று தெரிந்துவிட்டது. மக்களுக்காக முதல்வர் ஆக விரும்புகிறேன் என்றும் விரைவில் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள கமல், அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.
என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன். உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது. சினிமாவில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம். குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது. முதலில் மக்கள் பிரதிநிதியாக வந்து பிரச்சனைகளை தீர்த்துவிட்டு பின்னர் முதல்வராகலாம் என்றார்.