புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுடன், பொங்கலையும் முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த போட்டிக்காக 270 மாடுபிடி வீரர்களுக்கும், 300 காளை மாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த நிலையில் போட்டி ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் அரசு சொன்ன நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்துள்ளனர். ஏற்பாடுகளை சரியாக செய்துவிட்டு மற்றொரு தேதியில் ஜல்லிக்கட்டை நடத்த அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று ஜல்லிக்கட்டு நடக்காததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.