நண்பனுக்கு விஜயகாந்த் எழுதிய உருக்கமான கடிதம்

சனி, 11 ஜூலை 2015 (19:51 IST)
விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நண்பரை மருத்துவமனையில் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர் சுய நினைவின்றி இருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
 

 
இன்று தனது நண்பருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
 
அதில், "நண்பா... நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன்.
 
அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னைக் கண்டவுடன் நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடி பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண் முன்பே வந்து சென்றது.
 
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிராத்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா...!" 
 
அன்புடன் உன் நண்பன்,
விஜயகாந்த்
 
இவ்வாறு அக்கடிதத்தில் விஜயகாந்த் மிக உருக்கமாக எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்