இயக்குனர் கௌதமன் சென்னையில் கைது: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்!

ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (13:09 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் அவனியாபுரத்தில் இயக்குனர் கவுதமன் மீது தடியடி நடத்திய போலீசார் ரத்த காயங்களுடன் அவரை கைது செய்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்தது. போராட்டம் பெரும் வெற்றியடைந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது.


 
 
இந்நிலையில் மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கவுதமனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்ற போராட்டம் போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது.
 
டெல்லியில் கடந்த 20 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வரட்சி நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.
 
இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இயக்குனர் கவுதமனையும், மாணவர்களையும் கைது செய்தனர். போராட்டத்துக்கு உரிய அனுமதி வாங்கிய பின்னரும் அவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்