இதுநாள் வரை சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், நேற்று திடீரெனெ ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளர். மேலும், அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில், கட்சிப் பொறுப்பி டி.டி.வி. தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. இது சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியானது. மேலும், திவாகரன் தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் செய்து தரக்கூடாது என முக்கிய அரசு அதிகாரிகளிடம் தினகரன் கூறிவிட்டாராம். இது திவாகரனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடக்கத்திலிருந்து திவாகரனின் கட்டுப்பாட்டில்தான் தீபக் இருந்தார். ஜெ. மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலா தரப்பிடமிருந்து சில வாக்குறுதிகள் தீபக்கிற்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை செய்து தராமல் தினகரன் தரப்பு இழுத்துக் கொண்டே இருந்துள்ளனர் எனவும், அதுவே, தீபக்கின் அதிருப்திக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், சசிகலாவின் குடும்பத்திற்குள்ளேயே எழுந்துள்ள மோதலை பயன்படுத்தி, ஏற்கனவே அவர்களின் மீது கோபத்தில் இருக்கும் இரண்டு தொழிலதிபர்கள் மற்றும் ஒரு கொங்கு மண்டல புள்ளி ஆகியோர் தீபக்கை தங்கள் வசம் கொண்டு வர இணைந்து முயன்று அதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது.